திருவண்ணாமலை திருவண்ணாமலை வரலாற்றுச் சிறப்புடைய ஊராகும். தமிழகத்தின் புனித இடமாகக் கருதப்படும் திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தைக் கொண்டுள்ளது. அமைவிடம் இவ்வூர் வேலூருக்குத் தெற்கே 85 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் மிக அழகான மலைகள் அமைந்துள்ளன. சிறப்பு திருவண்ணாமலையிலுள்ள மலைமீது கார்த்திகைத் திருவிழாவின் போது சுமார் 2000 லிட்டர் நெய்யில் 30 மீட்டர் நீளமுள்ள திரியில் விளக்கேற்றப்படும். மலையைச் சுற்றி சுமார் 14 கி.மீ. தூரத்தை நடைவலமாக, பௌர்ணமி நாளன்று பக்தர்கள் மேற்கொள்கின்றனர். அருணாச்சலேஸ்வரர் கோவிலை பஞ்சபூத தலங்களில் ஒன்றாக, நெருப்புத் தலமாக மக்கள் நம்புகின்றார்கள். சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில், இந்தியாவில் உள்ள பெரிய கோவில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒன்பது கோபுரங்களையும், உயர்ந்த திருச்சுற்று மாளிகையையும், ஆயிரம்கால் மண்டபத்தையும் உள்ளடக்கியுள்ளது இத்திருக்கோயில். இங்கு பல சோழர் கல்வெட்டுகள் உள்ளன. வரலாறு் திருவண்ணாமலை பல்லவர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. முதலாம் பராந்தகன் காலம் முதல் சோழர் கல்வெட்டுகள் இங்கு கிடைக்கின்றன. கோப்பெருங்சிங்கன், காடவ அரசன், கல்வெட்டும் இங்கு கிடைக்கின்றது. சம்புவரையர்களும் இப்பகுதியை ஆட்சி புரிந்தனர். அவர்களது தலைநகரம் படைவீடு ஆகும். போசளர், விஜயநகர அரசர்கள் மற்றும் நாயக்கர்கள் இப்பகுதியை ஆட்சி புரிந்துள்ளனர். திருவண்ணாமலைப் பகுதியில் மோட்டுர், நெடுங்கல், தெள்ளூர் மற்றும் வெண்குன்னத்தில் பெருங்கற்காலச் சின்னங்கள் உள்ளன. சீயமங்கலம் பல்லவர் குடவரை, திருமலை சமணக் கோவில், கீழ்புத்தூர் சுயம்புநாதர் கோவில் ஆகியவை இப்பகுதியின் குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சின்னங்கள் ஆகும். |